சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.;
புதுடெல்லி,
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில்,
'கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்களை பாராட்டுகிறேன். தேசமே இந்த சாதனையை எண்ணி பெருமை கொள்கிறது. இதன் மூலம் நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உத்வேகம் பெறுவார்கள்' என்று தெரிவித்தார்.
மேல்சபையில் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசுகையில், 'இந்திய அணியின் வெற்றி தேசத்துக்கே மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தகைய வரலாற்று சாதனைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெரிய கனவு காண தூண்டுகிறது. கடினமாக உழைத்து மேன்மையை அடைய செய்யும்' என்று தெரிவித்தார்.