'பாகிஸ்தானில் இந்தியாவைப் போன்ற ஜனநாயகம் அமைய வேண்டும்' - குலாம் நபி ஆசாத்

பாகிஸ்தானில் ராணுவமே அரசாங்கத்தை நடத்துகிறது என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-10 14:18 GMT

ஸ்ரீநகர்,

பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களுக்கு சார்பான வேட்பாளருக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக வாக்கு எண்ணிக்கையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனநாயக முற்போக்கு அசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தானில் உள்ள மக்கள் அப்பாவிகள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் அரசே காரணம்.

இந்தியாவின் விதி நமக்கு ஜனநாயகத்தை வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் விதி அவர்களுக்கு சர்வாதிகாரிகளை வழங்கியுள்ளது. அங்கு ராணுவமே அரசாங்கத்தை நடத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் ராணுவத்தின் பேச்சைக் கேட்டவில்லை என்றால், அவரை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றி விடுகிறது.

நமது நாட்டில் நடைபெறும் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் இந்திய ராணுவம் தலையிடுவதில்லை என்பது நமது அதிர்ஷ்டமாகும். உலகம் முழுவதும் ஜனநாயக நாடுகளில் இவ்வாறுதான் நடக்கிறது. பாகிஸ்தானில் இந்தியாவைப் போன்ற ஜனநாயகம் அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்