'லூடோ' கேமில் மலர்ந்த காதல்; பாகிஸ்தான் பெண்ணை நேபாளத்தில் திருமணம் செய்து கர்நாடகாவில் குடியேறிய உ.பி. காவலாளி...! - ருசிகர சம்பவம்

காவலாளியாக வேலை செய்துவந்த அவர் ஆன்லைன் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

Update: 2023-01-23 14:41 GMT

பெங்களூரு,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் முலாயம் சிங். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்துவந்துள்லார்.

இதனிடையே, முலாயம் சிங் செல்போனில் ஆன்லைனில் லூடோ கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆன்லைனில் குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டின்போது முலாயம் சிங்கிற்கு பாகிஸ்தானை சேர்ந்த 19 வயதான இக்ரா ஜிவானி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் இருவரும் இணைந்து கேம் விளையாட்டுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

பின்னர், முலாயம் சிங்கும் இக்ரா ஜிவானியும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரும் கில்லாடி திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இக்ரா ஜிவானியும், இந்தியாவில் இருந்து முலாயம் சிங்கும் நேபாள நாட்டிற்கு சென்றுள்ளனர். நேபாளத்தில் வைத்து இக்ரா ஜிவானியும் - முலாயம் சிங்கும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் தனது மனைவியான பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜிவானியை கணவரான இந்தியாவின் முலாயம்சிங் நேபாளத்தில் இருந்து பீகார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்துவந்தார்.

பின்னர், இக்ரா ஜிவானியை தான் காவலாளியாக வேலை செய்துவரும் பெங்களூருவின் ஜுனசந்த்ரா பகுதியில் வாடகை வீட்டு எடுத்து முலாயம்சிங் குடியேறியுள்ளார்.

பின்னர், இக்ரா ஜிவானிவுக்கு முலாயம்சிங் ஆதார் அட்டையும் எடுத்துள்ளார். உண்மையான பெயரான இக்ரா ஜிவானிக்கு பதிலாக ரவா என்ற பெயரில் முலாயசிங் ஆதார் அட்டை எடுத்துள்ளார். அந்த ஆதார் அட்டையில் ரவா தனது மனைவி என்று முலாயம்சிங் குறிப்பிட்டுள்ளார். பின்னர், இக்ரா ஜிவானி இந்திய பாஸ்போர்ட்டிற்கும் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், ரவா என்று பெயரில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் இக்ரா ஜிவானியை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இக்ரா ஜிவானி கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இதை இந்திய புலனாய்வு துறையினர் கண்காணித்து உடனடியாக கர்நாடக உளவுத்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார் பெங்களூருவின் ஜுனசந்த்ரா பகுதியில் வாடகை வீட்டு கணவர் முலாயம்சிங் உடன் தங்கி இருந்த பாகிஸ்தான் பெண் இக்ரா ஜிவானியை இன்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் கேம் மூலம் பழகி காதலித்து பாகிஸ்தான் பெண்ணை நேபாளத்தில் திருமணம் செய்து பீகார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கர்நாடகாவில் மனைவியுடன் குடியேறிய உத்தரபிரதேச காவலாளியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்