'ராம ராஜ்யம் இதுதான்' ராஜஸ்தானில் பாகிஸ்தான் அகதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நேற்று அமலுக்கு கொண்டு வந்தது.

Update: 2024-03-12 11:20 GMT

ஜோத்பூர்,

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததற்கு ராஜஸ்தானில் வசித்து வரும் அகதிகள் வரவேற்றுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்கள் பலர், ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் அகதிகளாக பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ சட்டம் மூலம் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனால், மத்திய அரசு ,நேற்று சி.ஏ.ஏ. சட்டத்தை அறிவித்ததுமே பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு இதுதான் உண்மையான ராம ராஜ்யம் போல உள்ளது எனக் கூறிய புலம் பெயர் மக்கள் நீண்ட காலமாக இப்படிப்பட்ட அறிவிப்புக்குக்கு தான் காத்திருந்ததாகவும் இனி விரைவில் நாங்களும் இந்தியர்கள் ஆவோம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்