நாடு தழுவிய ரத்த தான இயக்கம்: 2.5 லட்சத்தைக் கடந்த கொடையாளர்களின் எண்ணிக்கை..!
'ராக்தான் அம்ரித் மகோத்சவ்' ரத்த தான இயக்கத்தின் கீழ் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த 17-ந்தேதி 'ராக்தான் அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் தேசிய அளவிலான ரத்த தான இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளதாகவும் இதன்மூலம் இந்தியா புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் தொடங்கிய 'ராக்தான் அம்ரித் மகோத்சவ்' திட்டத்தின் கீழ் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர். இந்த முயற்சியின் வெற்றி மனிதகுலத்தின் உன்னத நோக்கத்தை பலப்படுத்தியுள்ளது. இது பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பெரிதும் உதவும்" என்று கூறியுள்ளார்.
முகாமின் முதல் நாளிலேயே 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்து புதிய உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு முயற்சியாக 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான்' என்ற திட்டத்தை கடந்த செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இதுவரை சுமார் 13.5 லட்சம் காசநோயாளிகள் நிக்ஷய் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். நிக்ஷய் இணையதளம் காசநோயிலிருந்து விடுபடுவதற்கு காசநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்தவும், 2025-க்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
நிக்ஷய் மித்ராக்கள் என்ற இணையதளத்தில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து 9.5 லட்சத்துக்கும் அதிகமான காசநோயாளிகளுக்கு ஆதரவை வழங்க தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர்.