மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மாநில சிறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் திக்விஜய் சிங் மற்றும் பிரதிப் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் ஆகியோர், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி கடிதம் அளித்தனர்.
அடிப்படையில் ஒரு போலீஸ் அதிகாரியான நீங்கள் மணிப்பூர் பிரச்சினையின் அடிப்படை குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று குழுத்தலைவர் பிரிஜ்லாலை நோக்கி கூறிய அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர். ஆனால் இதற்கு நிலைக்குழுத்தலைவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மாதம் நடைபெறும் மேலும் 2 கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த விவகாரம் அரசு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.