எதிர்க்கட்சிகளின் கூட்டம்: மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார் உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

பெங்களூருவில் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று தொடங்கியது.

Update: 2023-07-18 00:14 GMT

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி பாட்னாவில் இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவரான தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ந்தேதிகளில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த அரசியல் கட்சி தலைவர்களை விமான நிலையங்களில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கியும், மாலை, சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால்

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ்வெஸ்ட் என்டு நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவரான தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ், அவரது மகனான பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,

24 கட்சிகளின் தலைவர்கள்

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவி மெகபூபா முக்தி,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த தலைவர்களுக்கு சோனியா காந்தி இரவு உணவு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. அப்போது தலைவர்கள் அரசியல் ரீதியிலான கருத்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்ததும் தலைவர்கள் அவரவர் தங்கும் விடுதிகளுக்கு சென்றனர்.

இன்று முக்கிய முடிவு

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அதே ஓட்டலில் நடக்கிறது. இதில் 24 கட்சிகளின் தலைவர்கள், சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதில் கூட்டணிக்கு பெயர் முடிவு செய்வது, கூட்டணி ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, தொகுதிகள் பங்கீடு, தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதியும் முடிவு செய்யப்பட இருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்