'நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்' - பா.ஜ.க. விமர்சனம்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Update: 2023-05-27 12:11 GMT

புதுடெல்லி,

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட 8 மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ளவில்லை. ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், கலந்து கொள்ளாததற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் சமீபத்திய அவசரச் சட்டம் காரணமாக கூட்டத்தை புறக்கணிப்பதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபின் நலன்களில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக அம்மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்வில்லை.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத், "நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டத்தில் 100 விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டாலும், எட்டு மாநில முதல்-மந்திரிகள் அதில் கலந்து கொள்ள வரவில்லை.

100 பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய கூட்டத்தில் கலந்து கொள்ள ஏன் அவர்கள் வரவில்லை? பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பதில் நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? பிரதமர் மோடியை எதிர்க்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் உங்கள் மாநில மக்களுக்கு ஏன் தீங்கு விளைவிக்கிறீர்கள்?

எட்டு முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் இந்த முடிவு முற்றிலும் பொறுப்பற்றது. மேலும் பொது நலனுக்கும் அவர்கள் தங்கள் மாநிலங்களில் ஆட்சி செய்யும் மக்களின் நலனுக்கும் எதிரானது" என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்