சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்கம்

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Update: 2022-09-10 05:58 GMT

கோப்புப்படம்  

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 300 பஸ்கள் மலைப்பாதையில் இயக்க திட்டமி டப்பட்டுள்ளது.

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி அளித்துள்ளார். ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பஸ் இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பஸ்களை இயக்கும் நிர்வாக பொறுப்பு மெகா என்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 36 இருக்கைகள், குளிர்சாதன வசதி. கண்காணிப்பு கேமரா தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை இந்த பஸ் இயக்க முடியும்‌. வருகிற 25-ந் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பஸ்கள் வர உள்ளன.

ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந் தேதி பிரமோற்சவ விழா தொடங்குகிறது. அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கஉள்ளார். அன்று இந்த எலக்ட்ரிக் பஸ்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 64,292 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,641 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரமாகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்