அயோத்தி ராமர் கோவில் திறப்பு: கர்நாடகத்தில் இன்று விடுமுறை கிடையாது - சித்தராமையா

அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-22 01:06 GMT

பெங்களூரு,

அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு விழா இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் மாபெரும் விழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சில மாநிலங்களும் பொது விடுமுறை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகத்திலும் இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவா்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று துமகூருவுக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி கர்நாடகாவில் பொது விடுமுறை விடப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்து கூறியதாவது:-

அயோத்தி ராமர்கோவில் திறப்பு விழா நாளை (இன்று) நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் விசேஷ பூஜைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்று (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அறிவிக்க மாட்டோம். யாருக்கும் அரசு பொது விடுமுறை கிடையாது. பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலை நான் திறந்து வைக்கிறேன். அந்த விழாவுக்கு என்னை அழைத்துள்ளனர். அதில் நான் கலந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்