ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பு ; உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு

டெல்லியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பது என முடிவு செய்யப்பட்டது.;

Update: 2023-09-24 00:30 GMT

இந்தியாவில் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு மாநிலத்தில் பொதுத்தேர்தலோ அல்லது இடைத்தேர்தலோ நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வீணான பொருட்செலவு

நாடு விடுதலை அடைந்த பின் முதலாவது தேர்தல் நடத்தப்பட்ட 1951-52 முதல் 1967 வரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் பெரும்பாலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தன. பின்னர் 1968-ம் ஆண்டு மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநிலங்களில் சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இதுபோல 1970-ம் ஆண்டு நாடாளுமன்றமும் ஓராண்டுக்கு முன்பே கலைக்கப்பட்டது. இதனால் இந்த தேர்தல் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டதால் தற்போது நாடாளுமன்றத்துக்கு தனியாகவும், சட்டமன்றங்களுக்கு தனியாகவும் தேர்தல்கள் நடந்து வருகின்றன.

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இவ்வாறு அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் வீணான பொருட்செலவும், பணியாளர்கள் மற்றும் வளங்களின் வீணடிப்பும் நிகழ்கிறது என்று கூறி மீண்டும் ஒரே தேர்தல் முறையை கொண்டுவர முயற்சி நடந்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்வைத்து நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நடைமுறையால் ஏராளமான நிதி மற்றும் வளங்கள் மிச்சப்படுவதால் இதை செயல்படுத்துவது அவசியம் என பிரதமர் மோடியும் கூறியிருந்தார்.

இதை நாடாளுமன்றத்திலும் அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் நாட்டில் தற்போது 543 மக்களவை தொகுதிகள், 4,120 சட்டமன்ற தொகுதிகள், 30 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மிகுந்த பொருட்செலவும், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தேவையும் உள்ளன. அதைவிட முக்கியமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதற்காக அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றை மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயர்மட்டக்குழு அமைப்பு

இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக உயர்மட்டக்குழு ஒன்றை கடந்த 2-ந்தேதி அமைத்து உத்தரவிட்டது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்த குழுவில் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் குலாம்நபி ஆசாத், ஊழல் தடுப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.

மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் இந்த குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும், சட்டத்துறை செயலாளர் நிதின் சந்திரா செயலாளராகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

சாத்தியக்கூறு ஆய்வு

இந்த உயர்மட்டக்குழுவை அமைத்த மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டு உள்ளது.அதன்படி இந்த குழுவினர் ஒரே நேரத்து தேர்தலுக்காக, அரசியல் சாசனம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் இந்த சட்டத்திருத்தங்கள் மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டுமா? என்பதையும் இந்த குழு ஆய்வு செய்யும்.

இதைத்தவிர தொங்கு சட்டசபை, நம்பிக்கை இல்லாத் தீர்மானம், கட்சித் தாவல் போன்ற சிக்கல்களுக்கு தீர்வுகள் உள்பட பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

டெல்லியில் முதல் கூட்டம்

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. குழு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், குலாம்நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் காஷ்யப், சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக ஒரே நேரத்து தேர்தலுக்காக திருத்த வேண்டிய சட்டங்கள், அதில் எதற்கெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் நடந்தன. மேலும் இயற்கை பேரிடர் உள்பட, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பருவநிலை சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதை பொறுத்தவரை மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடத்தினால் இயற்கை சவால்களில் இருந்து விடுபட முடியும் என உறுப்பினர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பு

இதைத்தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற மாநில கட்சிகளிடம் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற தீர்மானிக்கப்பட்டது.

இதைத்தவிர மத்திய சட்ட கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை கேட்கவும் உயர்மட்டக்குழு முடிவு செய்ததாக சட்ட அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்த கூட்டங்களில் மேலும் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்