மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்வைத்து நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நடைமுறையால் ஏராளமான நிதி மற்றும் வளங்கள் மிச்சப்படுவதால் இதை செயல்படுத்துவது அவசியம் என பிரதமர் மோடியும் கூறியிருந்தார்.
இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒன்றை கடந்த 2-ந்தேதி அமைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியதாவது:-
"இந்தியா-பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவை எல்லாம் பாஜகவின் திசை திருப்பும் முயற்சி. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். பாஜகவின் திசை திருப்பும் முயற்சியை நாங்கள் (காங்கிரஸ்) முறியடிப்போம்.
நாங்கள் இப்போது அரசியல் கட்சியாகப் போராடவில்லை, இந்திய அரசை எதிர்த்துப் போராடுகிறோம். இந்தியாவின் கட்டமைப்பை பாதுகாக்கவே போராடுகிறோம்; அதற்காகவே கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.