ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

Update: 2022-09-06 02:06 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க மேற்கூரையில் மழை நீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் தங்க தகடுகள் பதிக்கும் பராமரிப்பு பணி முடிவடைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை பகுதிக்கு மேலே உள்ள தங்க மேற்கூரையில் மழை காலங்களில் 13 இடங்களில் லேசான நீர் கசிவு இருந்து வந்தது. அதை சரி செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து கடந்த 29-ந் தேதி பி.பி. அனந்தன் ஆசாரி தலைமையில் தொடங்கிய பராமரிப்பு பணி முடிவடைந்தது.

இந்த பணியை திருவாபரணம் கமிஷனர் ஜி.பைஜூ, தலைமை பொறியாளர் ஆர்.அஜித்குமார், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம், செயல் அதிகாரி எச்.கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் ரஞ்சித் சேகர், ஐகோர்ட்டு மேற்பார்வை அதிகாரி பி.குருப் ஆகியோர் கண்காணித்தனர்.

இதற்கிடையே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.

10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். மாத பூஜை காலங்களை போலவே, நெய்அபிஷேகம், கலச பூஜை, களபபூஜை, சகஸ்ரகலச பூஜை, படிபூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தகவல் மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுனில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்