ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஜோக் நீர்வீழ்ச்சி, சிரிமனே அருவியை பார்த்து ரசித்தனர்.

Update: 2023-07-09 18:45 GMT

சிக்கமகளூரு-

ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஜோக் நீர்வீழ்ச்சி, சிரிமனே அருவியை பார்த்து ரசித்தனர்.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மலைநாடு மாவட்டங்களில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது.

குறிப்பாக சிவமொக்கா மாவட்டம் சாகரில் உள்ள உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்காவுக்கு நேற்று ஒரேநாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலை, சந்திர திரிகோண மலை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சிருங்கேரியில் உள்ள புகழ்பெற்ற சிரிமனே அருவியிலும் தண்ணீர் கொட்டுவதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு 100 அடி உயரத்தில் இருந்து பால் போல் தண்ணீர் கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலித்தனர். மேலும் அருவியை பார்த்து ரசித்து தங்கள் செல்போனில் படம் எடுத்து கொண்டனர்.

ஜோக் நீர்வீழ்ச்சி

இதேபோல், சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சாகர் தாலுகா ஜோக் நீர்வீழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வாகனங்களில் வந்திருந்தனர். ஜோக் நீர்வீழ்ச்சியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களின் செல்போன்களில் படமும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.

ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் வியாபாரம் படுஜோராக நடந்தது. கொரோனாவுக்கு பிறகு வியாபாரம் நடந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்