மல்பே கடற்கரையில் தங்கம் தேடும் வாலிபர்கள்
மல்பே கடற்கரையில், வாலிபர்கள் தங்கம் தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுப்பி: உடுப்பி மாவட்டம் மல்பேயில் பிரசித்தி பெற்ற மல்பே கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடலில் குளித்து செல்கிறார்கள். இவ்வாறு குளிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்க ஆபரணங்களை அணிந்து குளிக்கும் போது கடல் அலையில் அது அறுந்து தொலைந்து போகும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. நீண்ட நேரமாக தேடி பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிடுகிறார்கள்.
ஆனால் அந்த தங்க நகைகள் கடல் அலையில் எப்போதாவது கடற்கரையில் அடித்து வந்து கரை சேரும் சம்பவமும் நிகழ்கிறது. இதனால் அந்த தங்க நகைகளை தேடுவதற்காக மல்பே கடற்கரை பகுதியை ஒட்டிய வாலிபர்கள் தினமும் மல்பே கடற்கரையில் கொக்கு போல் காத்திருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிகழ்வு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.