எமர்ஜென்சி குறித்து ஓம் பிர்லா பேச்சு; நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் - டிம்பிள் யாதவ் எம்.பி. கருத்து

கடந்த காலத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் என சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-26 16:21 GMT

புதுடெல்லி,

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான கே.சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஓம் பிர்லா வெற்றி பெற்று, 2-வது முறை மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஓம் பிர்லா, கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிராக, மக்களவையில் இன்று தீர்மானத்தை வாசித்தார். அந்த தீர்மானத்தில், "இந்தியாவில் எமர்ஜென்சியை அமல்படுத்திய முடிவை இந்த மக்களவை கடுமையாக கண்டிக்கிறது. ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தி, அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை தாக்குதலுக்கு உள்ளாக்கினார்" என்று தெரிவித்தார்.

சபாநாயகர் ஓம் பிர்லா எமர்ஜென்சிக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தபோது மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். பின்னர் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், கடந்த காலத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் என சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று நினைத்தால், நாட்டின் தற்போதைய நிலையைப் பற்றிதான் நாம் பேச வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதா? பணவீக்கத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் குறைந்து வருகிறதா? எனவே கடந்த காலத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக நிகழ்காலத்தைப் பற்றி நாம் பேச வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை மாற்றுவது குறித்து நாம் சிந்திக்க முடியும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்