சக்லேஷ்புராவில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
சக்லேஷ்புராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.;
ஹாசன்-
சக்லேஷ்புராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் மீசை மஞ்சய்யா (வயது 73). சமூக ஆர்வலர். இவரது வீட்டின் அருகே 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீசை மஞ்சய்யா அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே கூற கூடாது என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மீசை மஞ்சய்யா தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள்.
இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய், அவளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறினாள்.
முதியவர் கைது
இதனால் மனம் உடைந்து போன சிறுமியின் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாயை மீட்டு ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சக்லேஷ்புரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மீசை மஞ்சய்யா சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து மீசை மஞ்சய்யா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதற்கிடையில் மீசை மஞ்சய்யா, கணவனை இழந்த பெண்கள் சிலரிடம், உதவி தொகை வழங்குவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து சில பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரிலும் போலீசார் மீசை மஞ்சய்யா மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.