கர்நாடகத்தில் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இன்று முதல் இயக்காது?
கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது என கூறப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலம் வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வாடகை கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும், ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு என கூறி 3 நாட்களுக்குள் வாடகை ஆட்டோ சேவையை இந்த நிறுவனங்கள் கைவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வாடகை ஆட்டோ சேவையை நிறுத்த அரசு நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் ஓடாது என கூறப்படுகிறது. மேலும், அரசின் இந்த உத்தரவை மீறி ஆட்டோக்கள் இயக்கப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.