ஒடிசா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை உடல் வன பகுதியில் காயங்களுடன் மீட்பு
ஒடிசா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் உடல் அடர்ந்த வன பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளது.
கட்டாக்,
ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையாக இருந்து வந்தவர் ராஜஸ்ரீ ஸ்வெயின். புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பதற்கான பயிற்சிக்காக 25 வீராங்கனைகளுடன் அவர் சென்றுள்ளார்.
இந்நிலையில், இறுதி பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. இதனை தொடர்ந்து, கடந்த 11-ந்தேதி டாங்கி என்ற பகுதியில் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளனர்.
அப்போது ராஜஸ்ரீ தனது பயிற்சியாளரிடம், தந்தையை பார்க்க செல்கிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன்பின் அவர் திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து, அவரது பயிற்சியாளர் கடந்த 11-ந்தேதி மங்களாபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கட்டாக் நகர் அருகே அதகார் பகுதியில் அடர்ந்த வன பகுதியில் மரம் ஒன்றில் தூக்கு போட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என துணை காவல் ஆணையாளர் பினாக் மிஷ்ரா கூறியுள்ளார்.
ராஜஸ்ரீயின் ஸ்கூட்டர், வன பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அவரது மொபைல் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, குருதிஜாதியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிஷ்ரா கூறியுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மீட்கப்பட்ட அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.