ஒடிசா ரெயில் விபத்து; அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிய ஓட்டுனர்கள்

ஒடிசா ரெயில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் காவலர் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பி உள்ளனர்.

Update: 2023-06-03 16:59 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 288 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மீட்பு பணிகள் நிறைவடைந்து தொடர்ந்து, அந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த விபத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் காவலர் ஆகியோரும் மற்றும் ஹவுரா எஸ்பிரஸ் ரெயிலின் காவலர் ஆகியோர் உயிர் தப்பி உள்ளனர்.

அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தென்கிழக்கு ரெயில்வேயின் காரக்பூர் பிரிவுக்கான மூத்த மண்டல வர்த்தக மேலாளர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார். சரக்கு ரெயிலின் ஓட்டுனர் மற்றும் காவலர் இருவரும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இது, நாட்டில் ஏற்பட்ட 4-வது மிக கொடிய ரெயில் விபத்து என கூறப்படுகிறது. இந்த விபத்து பற்றி ரெயில்வே அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்