ஒடிசா: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழியை தோண்டி அதன் வழியாக மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

Update: 2023-11-14 12:37 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் சோனிபூர் மாவட்டத்தில் 80 வயதான மூதாட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி அமரேஷ் பாண்டா கூறியதாவது:-

சதார் பிளாக், கைன்புலா கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் மூதாட்டி நேற்று மாலை தவறி விழுந்துவிட்டார். அவர் காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாதநிலையில் பொதுமக்கள் தேட ஆரம்பித்தனர். இரவு முழுவதும் ஊர்மக்கள் தேடியும் கிடைக்காததால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படையினர் (ODRAF), 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டறிந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். அந்த மூதாட்டி சுவாசிக்க ஆக்சிஜனை ஆழ்துளை கிணற்றில் செலுத்தினர், மேலும் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழியை தோண்டி அதன் வழியாக மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

5 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் சோனிபூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டியை வெளியே கொண்டு வரும் போது, அவரது நாடித் துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது. அவருடன் பாம்பு ஒன்றும் காணப்பட்டது. ஆனால் பாம்பு அவரை கடித்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என சோனிபூர் தொகுதி எம்எல்ஏவும், மாநில சுகாதார துறை மந்திரியுமான நிரஞ்சன் பூஜாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்