அவையில் ஆபாச பேச்சு; எதிர்க்கட்சிகள் அமளி: மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்

எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என நிதிஷ் குமார் கூறினார்.

Update: 2023-11-08 07:27 GMT

பாட்னா,

பீகார் சட்டசபையில், பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று பேசும்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விசயங்களை குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அவையில், அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற உறுப்பினர்கள் இடையே சிரிப்பொலி எழுந்தது. இதற்கு பா.ஜ.க. சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், பீகார் சட்டசபை இன்று கூடியதும், நிதிஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களை கொண்ட காகிதங்களை ஏந்தியபடியும் அமளியில் ஈடுபட்டனர்.

அவரை பேச விடாமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என நிதிஷ் குமார் கூறினார். இதேபோன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று கூறினார்.

அவருடைய இந்த பேச்சுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. எம்.எல்.சி. நிவேதிதா சிங் கூறும்போது, சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி முதல்-மந்திரி பேசுவார் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்போடு இருந்தோம்.

ஏனெனில், பா.ஜ.க. அதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. ஆனால், அவர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து விட்டார். பீகார் சட்டசபை வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஜாத் பூனாவல்லா கூறும்போது, சட்டசபையில் நிதிஷ் குமார், ஆபாசம், கண்ணியமற்ற, பாலியல் சார்ந்த, பெண் வெறுப்பு மற்றும் ஆணாதிக்கம் செலுத்த கூடிய வகையில் பேசியுள்ளார்.

இதுவே பீகார் முதல்-மந்திரியின் மனப்பான்மையாக உள்ளது. சட்டசபையிலேயே இதுபோன்ற பேச்சுகளை பேசும்போது, பீகார் பெண்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள் என்று கூறினார்.

பெண்களை சிறுமைப்படுத்தும் வகையில் நிதிஷ் பேசியுள்ளார் என பா.ஜ.க.வின் மற்றொரு தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சு வர்மா கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ் குமார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்