யு.ஜி.சி நெட், என்சிஇடி மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு
என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் நெட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த புகாரை அடுத்து இந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.
மேலும் ஜூன் 25 முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருந்த சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட் (CSIR UGC NET) தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யு.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட், என்சிஇடி ஆகிய தேர்வுகளின் மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, யு.ஜி.சி. நெட் தேர்வு ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4-ம் தேதிகளுக்கு இடையே நடைபெறும் என்றும், சி.எஸ்.ஐ.ஆர். யு.ஜி.சி. நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27-ந்தேதி வரை நடைபெறும் என்றும் என்சிஇடி தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.