போராட்டத்தின்போது விதிகளை மீறியதாக வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நோட்டீஸ்

போராட்டத்தின் போது விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 36 பேரை நேரில் ஆஜராகக்கூறி மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2023-06-13 21:25 GMT

பெங்களூரு:

காண்டிராக்டர்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் பட்டீல்(வயது 36). காண்டிராக்டரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வந்தார். அதன்படி பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக இருந்த பா.ஜனதாவின் மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியதன்பேரில் பெலகாவில் ரூ.4 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் சந்தோசுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஈசுவரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்து வந்த சந்தோஷ், முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.

வழக்கு

அதன்படி பெங்களூருவில் உள்ள அப்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வீட்டின் முன்பு காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா(தற்போதைய முதல்-மந்திரி), டி.கே.சிவக்குமார்(தற்போதைய துணை முதல்-மந்திரி), காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஒன்று திரண்டதாகவும், காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலீசாரை தாக்கியதாகவும், கர்நாடக போலீசாரின் சட்ட விதிகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஐகிரண்டு போலீசார் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் மீது பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியும் முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டது.

நோட்டீஸ்

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 36 பேரும் அடுத்த மாதம்(ஜூலை) 28-ந் தேதி நேரில் ஆஜராக கூறி உத்தரவிட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் இருந்து சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் 36 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்