கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார்

விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-07 18:45 GMT

குடகு-

விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது எம்.எல்.ஏ., போலீசாரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.

முத்தாமுர்டி கிராமம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது முத்தாமுர்டி கிராமம். இந்த கிராமத்தில் 54 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மூர்நாடு கிராம பஞ்சாயத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் கடந்த பல வருடங்களாக ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகளுக்கும் காலை 10 மணிக்கு மின்சாரத்தை வினியோகித்துவிட்டு மாலை 6 மணிக்கு தடை செய்து விடுகிறார்களாம். இதுபற்றி கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.விடம் புகார்

இந்த நிலையில் நேற்று முத்தாமுர்டி கிராமத்தைச் சேர்ந்த 54 குடும்பத்தினரும் மடிகேரிக்கு வந்தனர். அவர்கள் மடிகேரியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு எம்.எல்.ஏ. மந்தர் கவுடாவை சந்தித்து தங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாதது குறித்து புகார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் மடிகேரியில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் தங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத பெஸ்காம் மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்யாமல், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்