இந்தியா கூட்டணியில் முன்னேற்றம் இல்லை, காங். கட்சிக்கு... நிதிஷ் குமார் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிகிறது என நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் பிரமாண்ட கூட்டணி அமைத்து உள்ளன. 'இந்தியா' என்ற பெயரில் இணைந்துள்ள இந்த கட்சிகள் அடுத்தடுத்து 3 கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளன.கடந்த ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி 3-வது ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதன்பிறகு இந்தியா கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நிகழவில்லை. மத்திய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த தேர்தல் பணிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் தேக்க நிலை நிலவுவதற்கு காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியதாவது:
தற்போதைய மத்திய அரசை எதிர்க்கும் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால் சமீப காலமாக இந்த நடவடிக்கைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி 5 மாநில சட்டசபை தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்தியா கூட்டணியில், காங்கிரசுக்கு முக்கியப் பங்கு வழங்க நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டோம். ஆனால் அவர்கள் 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப் பிறகுதான் அடுத்த கூட்டத்தை அழைப்பார்கள் என்று தெரிகிறது"என்று கூறினார்.