பிடித்த உணவை சமைக்கவில்லை...!! 87 வயது பாட்டியை தாக்கிய தம்பதி; வைரலான வீடியோ
பாட்டியை தம்பதி தாக்கும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் படம் பிடித்து பகிர்ந்து உள்ளார்.;
போபால்,
மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் பர்கேதி பகுதியில் வசித்து வருபவர் தீபக் சென். ஜஹாங்கீராபாத் காவல் நிலையத்துக்குட்பட்ட அந்த பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூஜா சென். இதில், தீபக்கின் தந்தை வழி பாட்டியும் அவர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், தம்பதி இருவரும் சேர்ந்து 87 வயதுடைய அந்த பாட்டியை அடித்து, தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த தம்பதி, தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைக்கும்படி கூறி விட்டு வெளியே சென்றுள்ளது. ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது, அதனை அந்த பாட்டி சரியாக செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாட்டியை கடுமையாக அடித்துள்ளனர்.
இதனை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீடியோவாக பிடித்து வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலானதும், ஜஹாங்கீராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், போபால் காவல் ஆணையாளர் ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறும்போது, தீபக் மற்றும் பூஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோ அடிப்படையில், அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தீபக் மற்றும் அவருடைய மனைவி இருவரும் உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரை சேர்ந்தவர்கள் ஆவர். தொழிலுக்காக மத்திய பிரதேசத்தில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் பாட்டியை தாக்கும் சம்பவம் வீடியோவாக வெளிவந்து வைரலாகி உள்ளது.