டெல்லியில் 500 புதிய பள்ளி கூடங்கள் எல்லாம் வராது: பா.ஜ.க. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் 500 புதிய பள்ளி கூடங்கள் எல்லாம் வராது என பா.ஜ.க. அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

Update: 2022-08-29 06:40 GMT



புதுடெல்லி,



டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.விடம் விலை போகவில்லை என நிரூபிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகி விடும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி பிரிவு பா.ஜ.க.வை சேர்ந்த கவுரவ் பாட்டியா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் 500 புதிய பள்ளி கூடங்கள் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

புதிய பள்ளிகள் எதுவும் வராது. ஆனால், முன்பே திட்டமிட்டபடி, அவர்கள் பொது பணி துறையிடம் இருந்து அறிக்கை ஒன்றை பெற்று விட்டனர். கெஜ்ரிவால் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். புதிய பள்ளி கூடங்கள் எதுவும் கட்டப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி கூடங்களில் 2,400 வகுப்பறைகள் தேவையாக இருந்தன. ஆனால், அவை 7,180 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன என பாட்டியா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

வகுப்பறைகள் கட்டுவதற்கான கட்டுமான விலை 50 முதல் 90 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்கப்பட முடியும். இதில் பெரிய ஊழல் நடந்துள்ளது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கையில் தெரிவித்து, அதனை டெல்லி அரசு கண்காணிப்பு செயலாளருக்கு 2.5 ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பி விட்டது.

விலை உயர்வால், 6,133 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டிய இடத்தில் 4,027 வகுப்பறைகளே கட்டப்பட்டு உள்ளன. ரூ.326 கோடி விலை உயர்வு (53 சதவீதம்) நடந்துள்ளது என பாட்டியா கூறியுள்ளார்.

ஆனால், 2.5 ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்ட இந்த அறிக்கை பற்றி கெஜ்ரிவால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாட்டியா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்