வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை - மத்திய வருவாய் செயலாளர் உறுதி
வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான வருகிற 31-ந்தேதி என்ற காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என வருவாய் செயலாளர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம். வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஜூலை 31-ந்தேதி
வருமான வரி தாக்கலுக்காக கடைசி வரை காத்திருக்க வேண்டாம் எனவும், காலக்கெடு நீட்டிக்கப்படும் என நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்த விரும்புகிறோம். காலக்கெடு நீட்டிப்புக்கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை. எனவே வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் இதற்கான காலக்கெடுவான ஜூலை 31-ந்தேதி வேகமாக வருகிறது.
வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
மொத்த வரி வருவாய்
ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. எனினும், விகிதக் குறைப்பு காரணமாக உற்பத்தி வரியில் வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 2023-24-க்கான மத்திய பட்ஜெட்டின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.33.61 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
இதில் கார்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேநேரம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.