யூ-டியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த நபர் கைது

யூ-டியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த நொய்டாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-17 18:25 GMT

கோப்புப்படம்

நொய்டா,

யூ-டியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த நொய்டாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ரூ.38,220 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பீகாரின் முசாபர்பூரைச் சேர்ந்தவர் அப்துல் ரகிப் (வயது 30). இவர் தற்போது டெல்லியின் காஜிபூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்துல் ரகிப் வீட்டில் சோதனை செய்ததில் அவர் பங்கஜ் என்பவருடன் சேர்ந்து, பிரிண்டரைப் பயன்படுத்தி கள்ளநோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.

அவர்கள் பயன்படுத்திய பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.38,220 மதிப்புள்ள 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகிப்பை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான பங்கஜை தேடி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 489 A, 489B, 489 C மற்றும் 489 D உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் யூ-டியூப் மூலம் பிரிண்டரைப் பயன்படுத்தி போலி கள்ளநோட்டுகளை அச்சிடுவது பற்றி அறிந்துள்ளார். சுமார் இரண்டு மாதங்களாக அவர்கள் கள்ளநோட்டு அச்சிடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தி தங்கள் சொந்த உபயோகத்திற்காக பொருட்களை வாங்க முயன்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகிப்பை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்