விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடு கிடையாது; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடு கிடையாது என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
பெங்களூரு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடு கிடையாது என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேவையான ஆவணங்கள்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மைதானம் தங்களுக்கு சொந்தமானது என்று வக்பு வாரியம் கூறியது. அதற்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி அந்த வாரியத்திற்கு மாநகராட்சி உத்தரவிட்டு காலஅவகாசம் வழங்கியது. ஆனால் அந்த வாரியம் எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. அந்த மைதானம் கர்நாடக அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
அங்கு யாராவது தேசிய கொடி ஏற்றுவது, விநாயகர் சிலைகளை வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரினால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கட்டுப்பாடு கிடையாது
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெங்களூருவில் ஒரு வார்டுக்கு ஒரு சிலையை மட்டுமே வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முறை கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த நிலையை போல் இல்லாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம். சிலைகளை வைக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிப்பது குறித்து அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அதன்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆனால் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். ரசாயன கலவைகளால் செய்யப்படும் சிலைகளை வைக்க அனுமதி இல்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விநாயகர் சிலைகளை கரைக்க ஏரிகளில் தனியாக குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிலைகளை கரைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தியின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்து அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.