ஆசியாவின் உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-10 21:59 GMT

மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா ஆகியோர் சோஜிலா சுரங்கப்பாதையை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு செய்தார். இப்பாதை, காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைக்க உதவும் என்று அவர் கூறினார்.

சோஜிலா சுரங்கப்பாதை

குளிர்காலங்களில், ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை, பனியால் மூடப்பட்டு விடும். இதனால், காஷ்மீரில் இருந்து லடாக் துண்டிக்கப்பட்டு விடும்.

இதை கருத்தில்கொண்டு, அனைத்து வானிலைகளின்போதும் பயணம் செய்வதற்காக, கந்தர்பால் மாவட்டம் பல்டாலில் இருந்து லடாக்கின் மினிமார்க் வரை 13 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு 'சோஜிலா' சுரங்கப்பாதை என்று பெயர்.

தரைமட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 578 அடி உயரத்தில் இப்பாதை கட்டப்படுகிறது. ரூ.8 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இது, ஆசியாவிலேயே உயரமான இடத்தில் கட்டப்படும் நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது.

நிதின் கட்காரி ஆய்வு

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, 13 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற ஆலோசனை குழுவுடன் நேற்று அங்கு நேரில் சென்றார். 11 ஆயிரத்து 578 அடி உயரத்தில் நடந்து வரும் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுரங்கப்பாதையின் 38 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மைனஸ் 26 டிகிரி வெப்பநிலையில், இங்கு கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி

சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைக்க வேண்டும் என்ற கனவின் ஒரு அங்கம்தான் இந்த சுரங்கப்பாதை.

இந்திய வரலாற்றில் இது முக்கியமான, வரலாற்றுசிறப்பு மிக்கதாக அமையும். சுற்றுலா பெருகும். அதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். சுவிட்சர்லாந்து போன்று சொகுசு விடுதிகளையும், சாகச விளையாட்டுகளையும் இங்கு தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்