அடுத்தடுத்து நடந்த 2 கொலைகளால் அசாதாரண சூழ்நிலை: தட்சிண கன்னடாவில் இரவு நேர ஊரடங்கு அமல் - பதற்றம், போலீஸ் குவிப்பு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்ததால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-29 17:25 GMT

பெங்களூரு:

அடுத்தடுத்து 2 கொலைகள்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. அசாதாரண சூழ்நிலை நிலவியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சூரத்கல் அருகே முகமது பாசில் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து நடந்த 2 கொலை சம்பவங்களால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல்...

இந்த நிலையில் இந்த சம்பவங்களை தொடர்ந்து மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். தடை உத்தரவுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். மாவட்டத்தில் 19 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மதுபானக்கடைகள், மதுபான விடுதிகளை மூட உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியில் நடமாட யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு

இதற்கிடையே பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் நேற்று ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் இக்கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார். இரவு நேர ஊரடங்கு நேற்று மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது. வருகிற 1-ந்தேதி வரை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் தியேட்டர், கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்கு மேல் இயங்கக்கூடாது என்றும், அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டுமே இயங்கலாம் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும், பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் திக்குமுக்காடினர்

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கே தட்சிண கன்னடா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பதற்றமான இடங்களில் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மக்கள் திக்குமுக்காடினர்

Tags:    

மேலும் செய்திகள்