அடுத்தடுத்து திருப்பம்: குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா அறிவிப்பு
குஜராத்துக்கு ராகுல் காந்தி நாளை பயணம் செய்ய உள்ள சூழலில், குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஸ்வநாத் வகேலா இன்று ராஜினாமா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.;
காந்திநகர்,
குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் விஸ்வநாத் வகேலா. அவர் இன்று தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். குஜராத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சூழலில், வகேலாவின் இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜக்தீஷ் தக்கோர் ஆகியோருக்கு வகேலா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தனது பதவி விலகலை தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த குலாம் நபி ஆசாத் (வயது 73), காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆகஸ்டு 26-ந்தேதி கட்சியில் இருந்து விலகினார். அவரது வெளியேற்றம் தொடர்ச்சியாக, கட்சியின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பெருமளவில் வெளியேறினர்.
கடந்த 2-ந்தேதி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜீந்தர் பிரசாத் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்த வழக்கறிஞரான ஜெய்வீர் ஷெர்கில் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி பதவி விலகினார். பஞ்சாப்பின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கடந்த மே மாதம் பதவி விலகினார்.
முன்னாள் மத்திய சட்ட மந்திரி அஷ்வனி குமார் 46 ஆண்டுகால தொடர்பை விடுத்து காங்கிரசில் இருந்து கடந்த பிப்ரவரியில் விலகினார். குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்கள் ஒரு சில மாதங்களில் வரவிருக்கிற சூழலில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகி வருவது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.