உலகத்தின் புது நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச அளவிலான மோதல்களுக்கு இடையே உலகத்தின் புதிய நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-05-19 09:20 GMT

புதுடெல்லி,

குஜராத்தின் வதோதராவின் கரேளிபாக் பகுதியில் காணொலி காட்சி வழியே இளையோர் சிந்தனை என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. சமூக சேவை மற்றும் தேச கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த இளையோர் சிந்தனை கூட்டம் நடத்தப்படுகிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதனை வதோதராவின் குந்தல்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் மற்றும் கரேளிபாக் பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று பரவிய நெருக்கடியான காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகளை நாம் வழங்கினோம்.

சர்வதேச அளவில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு ஆகியவற்றின்போது, அமைதி ஏற்படுவதற்கான தகுதியான நாடாக பங்காற்றும் வகையில் உணவு பொருட்களை பரவலாக வினியோகம் செய்தோம்.

அதனால், உலகத்தின் புதிய நம்பிக்கையாக இன்று இந்தியா திகழ்ந்து வருகிறது என கூறியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழலில், சர்வதேச அளவில் உணவு பொருட்கள் வினியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மத்தியில் பிரதமர் குறிப்பிட்டு உள்ள விசயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அவர் தொடர்ந்து பேசும்போது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் யோகாவின் பாதையையும், ஆயுர்வேதத்தின் ஆற்றலையும் நாம் காட்டியுள்ளோம். மென்பொருளில் இருந்து விண்வெளி துறை வரை ஒரு புதிய வருங்காலத்தினை எதிர்நோக்கி காத்திருக்கும் நாடாக நாம் வெளிப்பட்டு கொண்டிருக்கிறோம்.

நாட்டில் அரசாங்கத்தின் செயலாற்றும் வழியானது மாறியுள்ளது. சமூகத்தின் சிந்தனை மாறியுள்ளது. பொதுமக்கள் பங்காற்றுவதும் அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சாத்தியமில்லை என நினைக்கப்பட்ட இலக்குகளில் கூட, இன்று அதுபோன்ற விசயங்களில் இந்தியா எப்படி சிறப்புடன் பணியாற்றி வருகிறது என்று உலகம் உற்று நோக்கி வருகிறது என பிரதமர் மோடி பேசும்போது பெருமிதமுடன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்