'புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும்' - தலைமை நீதிபதி சந்திரசூட்

புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-20 08:55 GMT

Image Courtesy : PTI

புதுடெல்லி,

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் புதிதாக இயற்றப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா', 'பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா' மற்றும் 'பாரதீய சாக்ஷியா சட்டம்' ஆகிய 3 சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

இந்த மூன்று சட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு டிசம்பர் 25-ந்தேதி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். அதே சமயம், வாகன ஓட்டுநர்களால் விபத்துக்குள்ளான வழக்குகள் தொடர்பான விதிமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது;-

"புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள், இந்தியாவின் குற்றவியல் நீதி தொடர்பான சட்டங்களின் கட்டமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வரும். குடிமக்களாகிய நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் புதிய சட்டங்கள் வெற்றிகரமாக அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், குற்ற வழக்கு விசாரணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் மிகவும் தேவையான முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தால் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது, இந்தியா மாறிவருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும் தற்போதைய சவால்களை சமாளிக்க புதிய சட்டக் கருவிகள் தேவைப்படுகின்றன."

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்