33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு; சித்தராமையா அரசு அதிரடி
கர்நாடக மந்திரிசபையில் உள்ள 33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சித்தராமையா அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
கர்நாடக மந்திரிசபையில் உள்ள 33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சித்தராமையா அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
33 மந்திரிகளுக்கு புதிய கார்
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து 100 நாட்களை கடந்துள்ளது. சித்தராமையா தலைமையிலான மந்திரி சபையில் 33 பேர் மந்திரிகளாக உள்ளனர். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்ததை தொடர்ந்து சித்தராமையா தனது மந்திரிசபை சாகாக்களுக்கு பரிசளிக்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட பழைய கார்களுக்கு பதிலாக புதியதாக சொகுசு கார் வழங்க முடிவு செய்தார்.
ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு
அதன்படி 33 மந்திரிகளுக்கு புதியதாக கார் வாங்க தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் 9 கோடியே 90 லட்சம் ரூபாயை கர்நாடக அரசு விடுவித்துள்ளது. அதாவது ஜி.எஸ்.டி., சாலை வரி உள்ளடக்கிய ஷோரூம் விலையில் ரூ.30 லட்சத்துக்கு கார் வாங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த 33 கார்களும் டொயட்டோ கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து கர்நாடக அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது. அதாவது மந்திரிகளுக்கு இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் என்ற சொகுசு கார் வழங்கப்பட உள்ளது.
புதிய காரில் வலம் வருவார்கள்
இந்த ரக கார் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.18.30 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.30.26 லட்சம் விலையில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கார்கள் 4,755 மி.மீ நீளமும், 1,850 மி.மீ. அகலமும், 1,795 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இதில் கேப்டன் சீட் மற்றும் ஸ்லைடு மற்றும் ரிக்லைன் வசதி, டிரைவர் இருக்கை தங்களது வசதிக்கு ஏற்ப திருப்பி கொள்ளும் வசதி, ஏ.சி. வசதி, தொடுதிரைகள் ஸ்பீக்கர்கள், இரட்டை ஏர் பேக் வசதி, இம்பாக்ட் சென்சிங் டோர் அன்லாக் வசதியும் உள்ளன. இந்த கார்களை தான் கர்நாடக அரசு மந்திரிகளுக்கு வழங்க கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் சில வாரத்திற்குள் அந்த புதிய கார்களில் தான் மந்திரிகள் வலம் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.