குழந்தைகளின் உடல்திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறுகளே காரணம்

குழந்தைகளின் உடல்திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறுகளே காரணம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-17 21:03 GMT

பெங்களூரு:-

3-வது தேசிய மாநாடு

பெங்களூருவில் நேற்று சுகாதாரம் மற்றும் உடல்திறன் குறைபாடுகளுக்கான காமன்வெல்த் சங்கத்தின் 3-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசியதாவது:-

தற்போது புழக்கத்தில் இருக்கும் உணவு பழக்கங்கள், வாழ்கை முறைகள், தூங்கும் முறைகள் போன்றவற்றால் மனநல சிக்கல்கள் மற்றும் நோய்கள் ஏற்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் மனநலம் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் எழுந்துள்ளது. பல்வேறு மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

70 சதவீதம் குழந்தைகள்

சுகாதார கட்டமைப்பில் மனநலம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியாவில் நரம்பியல் சிக்கல்கள், பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதை நாம் கவனிக்க தவறி விட்டோம் என்றால், நாட்டின் பொருளாதாரம், சமூக நலன், வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து விடும்.

நரம்பியல் பிரச்சினைகளால் மனச்சோர்வு, பக்கவாதம், வலிப்பு நோய் ஏற்படுகிறது. குழந்தைகளின் உடல் திறன் குறைபாடுகளுக்கு நரம்பியல் கோளாறு முக்கிய காரணமாகும். 70 சதவீத குழந்தைகளின் உடல்திறன் குறைபாடுகள் ஏற்படுவதற்கு இந்த நரம்பியல் கோளாறே காரணமாக உள்ளது.

விழிப்புணர்வு

இது நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே நரம்பியல் பிரச்சினைகள் குறித்து பள்ளி மாணவர்களில் இருந்து தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். நிமான்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகமும், அரசும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் குறைபாடுகள் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது.

குறிப்பாக மனநலம் சார்ந்த குறைபாடுகளுக்கு நிமான்ஸ் மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மந்திரி சுதாகர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்