பெங்களூரு நேரு கோளரங்கில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு

இன்று (செவ்வாய்க்கிழமை) வானில் நிகழும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க பெங்களுரு நேரு கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-24 18:45 GMT

பெங்களூரு:

சூரிய கிரகணம்

தீபாவளிக்கு மறுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தேதி நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ளது. இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட உள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும். இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும்.

இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

பெங்களூரு-மங்களூரு

இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும்.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். ஆய்ஜோல், திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் இது தென்படாது.

நேரு கோளரங்கில் ஏற்பாடு

பெங்களூருவில் கப்பன் பூங்கா அருகில் உள்ள நேரு கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பிரத்யேக தொலைநோக்கி கருவி மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய கிரகணத்தையொட்டி கர்நாடகத்தில் கோவில் நடைகள் சாத்தப்படுகிறது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்