'நீட்' தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி - ஆந்திர மாணவிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.

Update: 2023-08-25 01:32 GMT

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வில் 697 மதிப்பெண் பெற்றதாகவும், ஆனால் இணையதளம் மூலம் மருத்துவக்கல்விக்காக விண்ணிப்பிக்க முயன்றபோது, தனது மதிப்பெண் 103 என காட்டுவதாகவும் இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் கூறி ஆந்திர மாணவி ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக விடைத்தாள் நகலையும் சமர்ப்பித்த அவர், தனது விடைத்தாளில் திருத்தம் செய்திருப்பதாக தேசிய தேர்வு முகமை மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் விசாரித்தார். அப்போது மாணவியின் அசல் விடைத்தாளை தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்போது மாணவி தனது விடைத்தாளில் திருத்தம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மாணவிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த பயங்கர குற்றத்தை மேற்கொண்டதற்காக மாணவிக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், போலீசில் ஒப்படைக்கவும் நினைத்ததாக கூறிய நீதிபதி, அவரது இளம் வயதை கருத்தில் கொண்டு அதை தவிர்த்ததாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்