இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது.;
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. முதல் செட் சுற்றில் அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, இரண்டாம் இடம் பிடித்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார். கரீபியனின் கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 88.54 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
2024 ஒலிம்பிக் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருந்தார். இதனால் இந்தியாவுக்கு, இவர் மூலம் மீண்டும் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்தது.
எனினும், தற்போது வெள்ளி வென்றதன் மூலம், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் என்ற சாதனையை நீரஜ் படைத்துள்ளார். கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.