சிவமொக்கா அருகே காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள்

சிவமொக்கா அருகே பத்ராவதியில் காந்தி சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-21 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா அருகே பத்ராவதியில் காந்தி சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை உடைப்பு

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் டவுனில் காந்தி சர்க்கிளில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை அங்கு நிறுவப்பட்டது. மேலும் காந்தி சிலையை சுற்றி மண்டபம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்மநபர்கள் காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அவர்கள் காந்தி சிலையை உடைத்து கீழே தள்ளி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை காந்தி சிலை உடைந்து சேதமடைந்து கிடப்பதை பார்த்து அந்தப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக ஒலேஒன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பத்ராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒலேஒன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், நள்ளிரவில் 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் சாலை மறியல்

இதற்கிடையே, காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியதை கண்டித்து அந்தப்பகுதியில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரபரப்பு

இதுகுறித்து ஒலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பத்ராவதியில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்