சிக்கமகளூரு அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

சிக்கமகளூரு அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-25 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்சை வழிமறித்த காட்டுயானை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவையொட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுயானைகள், விளைபயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இந்த காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காட்டுயானை ஒன்று சாலையில் சென்ற அரசு பஸ்சை வழிமறித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடுவை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கொல்லிபைலு கிராமம் அருகே சென்றபோது, திடீரென்று காட்டுயானை ஒன்று பஸ்சின் குறுக்கே வந்து நின்றது. இதை பார்த்த டிரைவர் உடனே பதற்றம் அடைந்து பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த காட்டு யானை பஸ்சை சுற்றி வந்தது. இதை பார்த்த பயணிகள் கதறி கூச்சலிட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் வெளியே வரவில்லை.

பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தல்

இதையடுத்து சிறிது நேரம் பஸ்சை சுற்றி வந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து சாலையை கடந்து சென்றது. இதையடுத்து பஸ்சில் இருந்து வெளியே வந்த பயணிகள், கதறி கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இருப்பினும் கொல்லிபைலு கிராம மக்களிடையே தொடர்ந்து பீதி நிலவி வருகிறது.

எந்நேரம் வேண்டுமென்றாலும் காட்டுயானைகள் மீண்டும் கிராமத்திற்குள் வரக்கூடும் என்பதால், அந்த பகுதி மக்கள் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி கூறியுள்ளனர். இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் கொல்லிபைலு கிராமத்தின் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்