பண்ட்வால் அருகே வாலிபர் அடித்து கொலை; நண்பர்கள் 3 பேர் சிக்கினர்
பண்ட்வால் அருகே கஞ்சா விற்ற பணத்தை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
பண்ட்வால் அருகே கஞ்சா விற்ற பணத்தை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மாயம்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா குக்கஜேவை அடுத்த காபிக்கட்டே பகுதியை சேர்ந்தவர் சவாத் (வயது 35). திருமணமான இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியே சென்று வருவதாக சவாத், மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, சவாத்தை, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி அலைந்தார். ஆனால் சவாத் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மனைவி பண்ட்வால் போலீசில் கணவன் மாயமானதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சவாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்மடி மலைப்பகுதியில் ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக பனகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் அது மாயமானதாக தேடப்பட்ட சவாத் என்பது தெரியவந்தது. முன்விரோதத்தில் யாரோ அவரை அடித்து கொலை செய்திருப்பதாக தெரியவந்தது.
நண்பர்கள் 3 பேர் கைது
இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் சவாத்தை அவரது நண்பர்கள் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதாவது சவாத் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த கஞ்சா விற்பனையில் கிடைக்கும் பணத்தை நண்பர்கள் பிரித்து கொள்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று பணத்தை பிரித்து கொள்வதில், சவாத் மற்றும் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நண்பர்கள் சவாத்தை தாக்கினர். இதில் சவாத் உயிரிழந்தார். இதையடுத்து நண்பர்கள் சவாத்தின் உடலை சார்மடி வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த கொலை தொடர்பாக நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர். இது குறித்து கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு ெசய்தனர்.