பிரிதிவிராஜ் சவான் ஆட்சி பற்றி கருத்து கூறிய அஜித்பவார் மீது காங்கிரஸ் கடும் தாக்கு
பிரிதிவிராஜ் சவான் ஆட்சியின் போது மகிழ்ச்சி அடையவில்லை என்று கருத்து கூறிய அஜித்பவாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.;
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜனதாவுடன் கைகோர் க்க இருப்பதாக தகவல் பரவியது.
மோதல்
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். அப்போது உடன் இருந்த எம்.பி. சஞ்சய் ராவத் கட்சி பத்திரிகையான சாம்னாவில் இதுகுறித்து எழுதினார். இதில், "தனிப்பட்ட முறையில் தேசியவாத காங்கிரசில் இருந்து யாராவது விலகி சென்றாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியோ அல்லது கட்சியில் இருந்து ஒரு அணியோ பா.ஜனதாவுடன் கைகோர்க்காது என்று சரத்பவார் தன்னிடம் கூறினார்" என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து சஞ்சய் ராவத்தை அஜித்பவார் கடுமையாக விமர்சித்தார். தற்போது மற்ற கட்சியினர் தேசியவாத காங்கிரசுக்கு செய்தி தொடர்பாளர்கள் போல செயல்படுவதாக மறைமுகமாக தாக்கினார். இதனால் கூட்டணி கட்சிகளான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிக்கும், அஜித்பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
முதல்-மந்திரி லட்சியம்
இந்த நிலையில் அஜித்பவார் நிருபர்களை சந்தித்தபோது உங்களுக்கு முதல்-மந்திரியாகும் லட்சியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அஜித்பவார், " ஆம் நான் 100 சதவீதம் முதல்-மந்திரி ஆக விரும்புகிறேன்" என்று பதில் அளித்தார். மேலும் 2024 சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருக்காமல் தேசியவாத காங்கிரசால் தற்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு உரிமை கோர முடியும் என்று கூறியிருந்தார்.
மேலும் அஜித்பவார் தனது பேட்டியின்போது, உத்தவ் தாக்கரே ஆட்சியில் துணை முதல்-மந்திரி பதவி வகித்த நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் நடந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறியிருந்தார். (இந்த ஆட்சியின் போது 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை அஜித்பவார் துணை முதல்-மந்திரி பதவி வகித்தார்).
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
அஜித்பவாரின் இந்த கருத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிரிதிவிராஜ் சவான் எங்களது தலைவர். அவரை பற்றி அஜித்பவார் இப்படி கூறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது அஜித்பவார் மகிழ்ச்சி அடையவில்லை என்றால், அவர் ஏன் மந்திரியாகவும், பின்னர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றார். அந்த நேரத்தில் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். பதவியில் தொடர்ந்தது ஏன்?.
2024 சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருக்காமல் இப்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் உரிமை கோர முடியும் என்றும் அஜித்பவார் கூறியிருக்கிறார். 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால், அவர் நிச்சயம் முதல்-மந்திரியாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.