என்.சி.சி. மாணவர்களை கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து அடித்த கொடுமை..!

மராட்டியத்தில் என்.சி.சி. மாணவர்களை தடியால் அடித்து நொறுக்கிய சீனியர் மாணவர், சேற்றில் கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-04 07:40 GMT

மும்பை,

ஒழுக்கம், தேசப்பற்று, சேவை உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்கள், எதிர்காலத்தில் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு முயற்சிக்கும்போது இந்த சான்றிதழ்கள் ஓரளவுக்கு கருத்தில் கொள்ளப்படும். குறிப்பாக, என்சிசி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் தேசிய மாணவர் படையான என்.சி.சி.யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர், கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து தடியால் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மும்பை அருகில் உள்ள தானேவில் உள்ள ஒரு கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டபோது அவர்களில் நான்கு பேர் தவறு செய்ததாக சொல்லப்படுகிறது.

உடனே அந்த 4 மாணவர்களையும் பயிற்சி நடைபெறும் மைதானத்தில் சேற்றில் மண்டியிட வைத்து, தடியால் அடித்து உதைத்த சீனியர் மாணவர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து அக்கல்லூரி முதல்வர் சுசித்ரா நாயக் கூறுகையில்,

என்.சி.சி. மாணவர்களை அடித்தது எங்களது கல்லூரி மாணவர் கிடையாது. அவர் எங்களது நிர்வாகத்தில் உள்ள மற்றொரு கல்லூரியை சேர்ந்தவர். இது போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்தது கிடையாது.

துரதிர்ஷ்டவசமாக இது நடந்திருக்கிறது. இது போன்ற செயல்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது. சம்பவம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அக்கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் யாருக்கும் பிரச்சினை என்றால் எங்களிடம் புகார் செய்யலாம். இச்சம்பவத்தால் என்.சி.சி.யை விட்டு யாரும் செல்லவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்