முதல்-மந்திரியாக பதவியேற்றதும் மேடையில் வைத்து நயாப் சைனி செய்த செயல் - வைரல் வீடியோ

அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார்.

Update: 2024-03-12 13:26 GMT

சண்டிகர்,

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எனினும், கூட்டணி கட்சிகளின் உதவியுடனேயே அரசு நடந்து வரும் சூழலில், அதில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.

ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை முன்னிட்டு அரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கினார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் விழா மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் காலில் விழுந்து நயாப் சைனி வணங்கினார். உடனே லால் கட்டார் எழுந்து நயாப் சைனியை கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா காலிலும் விழுந்து நயாப் சைனி வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்