நக்சலைட்டுகள் மிரட்டல்: பத்மஸ்ரீ விருதினை திரும்ப ஒப்படைக்க பாரம்பரிய மருத்துவர் முடிவு

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற புகைப்படங்கள் அடங்கிய நோட்டீஸ்களை நக்சலைட்டுகள் அந்த பகுதியில் வீசி விட்டு சென்றனர்.

Update: 2024-05-27 11:48 GMT

நாராயண்பூர்,

சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹேம்சந்த் மஞ்சி (வயது 72). வைத்தியராஜ் என்ற பெயராலும் பரவலாக அறியப்படும் மஞ்சி பாரம்பரிய மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டின் 4-வது உயரிய பத்மஸ்ரீ விருது கடந்த மாதம் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விருதினை திரும்ப ஒப்படைக்க போகிறேன் என அவர் கூறியுள்ளார். இதற்கு பின்னணியில் நக்சலைட்டுகளின் மிரட்டல் உள்ளது என கூறப்படுகிறது.

நக்சலைட்டுகள் நேற்றிரவு சமேலி மற்றும் கார்டண்ட் கிராமங்களில் கட்டுமான பணியில் இருந்த இரண்டு மொபைல் போன் கோபுரங்களுக்கு தீ வைத்தனர். மஞ்சிக்கு மிரட்டல் விடும் வகையில், பேனர்களையும் வைத்து விட்டு சென்றனர்.

இதுதவிர, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற புகைப்படங்கள் அடங்கிய நோட்டீஸ்களையும் அவர்கள் அந்த பகுதியில் வீசி விட்டு சென்றனர்.

நாராயண்பூர் நகரில் இரும்பு தாது சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு மஞ்சி உதவியுள்ளார் என்றும் அதற்கு ஈடாக பெரிய தொகையை பெற்று கொண்டார் என்றும் நக்சலைட்டுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், கடந்த காலத்தில் இதனை மஞ்சி மறுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இன்று மீண்டும் மறுத்துள்ள மஞ்சி, இரும்பு தாது சுரங்கத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்பே கிராமவாசிகளிடம் தெளிவுப்படுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, குடும்பத்தினருடன் ஆலோசனை செய்தபின், பத்மஸ்ரீ விருதினை திரும்ப ஒப்படைப்பது மற்றும் பாரம்பரிய மருத்துவ பணியை கைவிடுவது என்றும் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த விருது வேண்டும் என்று நான் கேட்டு வாங்கவில்லை. மக்களுக்கு சேவையாற்றியதற்காக எனக்கு விருது கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவருடைய மருமகன் கோமல் மஞ்சியை நக்சலைட்டுகள் கொலை செய்து விட்டனர் என்றும் அவர் கூறுகிறார். கொலை மிரட்டலின் நிழலின் கீழ் அவருடைய குடும்பம் உள்ளது என்றும் வேதனை தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, வேறிடத்திற்கு சென்று வாடகை வீட்டில் 3 பாதுகாப்பு அதிகாரிகளின் காவலுடன் மஞ்சி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஜெயஸ்வால் நிகோ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆம்டை காடி பகுதியில் இரும்பு தாது சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நக்சலைட்டுகள் முன்பிருந்தே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்