அரசின் வளர்ச்சி பணிகளால் நாடு முழுவதும் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது - மத்திய அரசு தகவல்

மக்களவையில் மந்திரி நித்தியானந் ராய் கூறுகையில், நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Update: 2022-07-26 10:17 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெற்றன.

இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை மந்திரி நித்தியானந் ராய் கூறுகையில், நாடு முழுவதும் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 90 மாவட்டங்களில் நக்சல்களின் நடமாட்டம் இருந்தன. இடதுசாரி தீவிரவாதம் (எல்.டபிள்யூ.இ) என்றும் அழைக்கப்படும் இந்த நக்சல் அமைப்பினர் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 70 ஆக இருந்தது. இப்போது வெகுவாக குறைந்துள்ளது என்று எழுத்தப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

அதேபோல நக்சல் வன்முறை சம்பவங்களும் குறைந்துள்ளன. 2014 இல் 1091 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, 2021 ஆம் ஆண்டு 509 வன்முறை சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன என்றார். இந்த கேள்வியை பாஜக எம்.பி.க்கள் சுசில் குமார் சிங் மற்றும் சுதர்சன் பாகத் எழுப்பினர்.

மந்திரி நித்தியானந் ராய் எழுத்தப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

2014 முதல் மத்திய அரசு நக்சல் பாதித்த மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நக்சல் பாதித்த பகுதிகளில் சாலைகள், பாலங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள் போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2014-15 நிதியாண்டு முதல் 2021-2022 வரை ரூ.6578 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2006-2005 நிதியாண்டு முதல் 2013- 2014 வரை ரூ.2181 கோடி ஒதுக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக ரூ.11,780 கோடி தொகை சாலை அமைப்பதற்காக நக்சல் பாதித்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,082 கிலோமீட்டர் தூர பரப்பளவிற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றுள் 6,274 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 32 கேந்திரிய வித்யாலயா மற்றும் 9 ஜவகர் நவ வித்யாலயா பள்ளிகள் நக்சல் பாதித்த மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 207 ஏகலவ்யா உண்டுஉறைவிட மாதிரி பள்ளிகள் ஏற்படுத்திட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1258 வங்கி கிளைகள் மற்றும் 1348 ஏடிஎம் மையங்கள் நக்சல் பாதித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன 4903 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்