மைசூருவில், காங்கிரசார் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில், காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-22 20:15 GMT

மைசூரு:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில், காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

அமலாக்கப்பிரிவு விசாரணை

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகத்திலும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதேபோல் நேற்று மைசூரு டவுன் காந்தி சவுக்கில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜி.பரமேஸ்வர் மற்றும் மகாதேவப்பா தலைமையில் நடந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பரமேஸ்வர் கூறியதாவது:-

40 சதவீதம் கமிஷன் விவகாரம்

மத்திய அரசு எத்தனை சோதனை நடத்தினாலும் அஞ்சமாட்டோம். ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள், எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. சொத்துகள் இருந்தாலும் அதற்கு முறைப்படி கணக்கு வரி கட்டி கொண்டிருக்கிறோம். சோனியா காந்தி குடும்பத்திற்கு பரம்பரை சொத்துகள் அதிகம் உள்ளது. அதனை நாட்டின் நலத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு முறைகேடாக சொத்துகுவிக்க வேண்டிய அவசியமில்லை. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காகவே பா.ஜனதா அரசு பழைய கதைகளை தோண்டி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. உண்மையில், 40 சதவீதம் கமிஷன் விவகாரத்தில் பா.ஜனதாவினரின் வீடுகளில் தான் சோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசார் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்